தைவானுக்கு போர் விமானங்களுக்கான ஏவுகணைகள் உள்ளிட்ட ரூ.8,772 கோடி மதிப்பிலான ஆயுதங்களை விற்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
அமெரிக்க நாட்டின் சபாநாயகர் நான்சி பெலோசி இந்த மாத தொடக்கத்தில் சீனா நாட்டின் எதிர்ப்பையும் மீறி, தைவானுக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்தினார். அமெரிக்காவின் உயர் பொறுப்பிலுள்ள ஒருவர், தைவானுக்கு சென்றது 25 ஆண்டுகளில் இல்லாத வகையிலான ஒன்று. பெலோசியின் இந்த சுற்றுப்பயணம் சீனாவால் கடுமையாக எதிர்க்கப்பட்டுள்ளது. பெலோசி புறப்பட்டு சென்றதும், தனது படைபலம் பற்றி உலக நாடுகள் அறிந்து கொள்ள செய்யும் வகையில், தைவானை சுற்றி ராணுவ போர் பயிற்சிகளை பல நாட்களாக சீனா நடத்தியுள்ளது. இதனால் போர் பதற்றம் தொற்றி கொண்டது. இதன் பின்பு சில காலம் கழித்து சீனா போர் பயிற்சியை நிறுத்தி கொண்டது. இருப்பினும் தைவானின் சுயாட்சி நிலைப்பாட்டுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்திய அமெரிக்கா, மறுபுறம் ஒரே சீனா கொள்கைக்கும் தனது ஆதரவை தெரிவித்து, இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தி குழப்ப சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், உஷாரான தைவான் 2023-ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு துறைக்கு பட்ஜெட்டில் ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 971 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்வது என முடிவு செய்துள்ளது. இது இந்த ஆண்டிற்கான மொத்த ஒதுக்கீட்டை விட 14.9 % அதிகம் ஆகும்.
தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்க கூடும் என்ற தகவல்கள் வெளியான நிலையில், வாஷிங்டனில் உள்ள சீன தூதரகம் உடனடியாக அதற்கு எதிர்வினையாற்றியது. தைவானுடனான ராணுவ தொடர்பை அமெரிக்கா நிறுத்தி கொள்ள வேண்டும். தைவான் பகுதியில் பதற்றம் ஏற்படுவதற்கான காரணிகள் உருவாகாமல் நிறுத்தப்பட வேண்டும். தைவானின் சுதந்திரத்திற்கு ஆதரவு இல்லை என்ற அமெரிக்க அரசாங்கத்தின் அறிக்கையின்படி, அமெரிக்கா செயல்பட வேண்டும் என்று சீன தூதரகம் சுட்டி காட்டியது. இதனை தொடர்ந்து, இது ஒரே சீனா கொள்கையை முற்றிலும் மீறும் விவகாரம் என்றும் சீன இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களை பாதுகாத்து கொள்ள உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால், அதனை கவனத்தில் கொள்ளாத அமெரிக்கா அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதன்படி, பைடன் அரசாங்கம் தைவானுக்கு போர் விமானங்களுக்கான ஏவுகணைகள் உள்ளிட்ட ரூ.8,772 கோடி மதிப்பிலான ஆயுதங்களை விற்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதலை நாடாளுமன்றத்தில் பெறுவதற்கு பைடன் அரசு திட்டமிட்டுள்ளது. இவற்றில், போர் விமானங்களுக்கான ஏவுகணைகள், கப்பல்களை தாக்கி அழிக்க கூடிய 60 ஹார்ப்பூன் ஏவுகணைகள், வானில் வரும் ஏவுகணைகளை வானில் சென்று தாக்கி அழிக்கும் 100 ஏவுகணைகள் மற்றும் ஒரு ரேடார் கண்காணிப்பு விரிவாக்க அமைப்பு உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் என ஸ்புட்னிக் நியூஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.