அனைவருக்கும் வங்கி சேவைகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் ஜன் தன் யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் நிறைவடைந்து விட்டது. வங்கி சேவைகள், பணம் பரிவர்த்தனை, கடன், இன்சூரன்ஸ் மற்றும் பென்ஷன் போன்ற நிதி சேவைகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். இதில் அனைவரும் வங்கி கணக்கு திறந்து கொள்ளலாம்.
இந்த கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் எதுவும் கிடையாது. ஏடிஎம் கார்டு உள்ளிட்ட வசதிகளும் கிடைக்கும்.அரசு திட்டங்களின் பயன்கள் பொதுமக்களுக்கு சென்று சேர இந்த கணக்குகள் பெரிதும் உதவியாக இருப்பது மட்டுமல்லாமல் ஓவர் டிராப்ட் வசதியும் உள்ளது. அதாவது இந்த வங்கி கணக்குகளுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை ஓவர் டிராப்ட் வசதி கிடைக்கின்றது.
இதற்கு முன்பு இதன் வரம்பு ஐந்தாயிரம் ரூபாயாக இருந்த நிலையில் தற்போது பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.ஓவர் டிராப்ட் வசதி என்பது உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் நீங்கள் பத்தாயிரம் ரூபாய் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம். இதில் 2000 ரூபாய் வரை எடுப்பதற்கு எந்த ஒரு நிபந்தனைகளும் கிடையாது. ஓவர் ட்ராப்டில் எடுக்கப்படும் தொகையை திருப்பி செலுத்த வேண்டும்.