கால்பந்து போட்டிகளில் கார்னர் கிக்கிலிருந்து டைரெக்கடாக கோல் அடிப்பது அவ்வளவு எளிதல்ல. நேர்த்தியான கோணத்தில் பந்தை அடித்தால் மட்டுமே அதுபோன்ற கோல் அடிக்க முடியும். அப்படி கோல் அடிப்பதற்கு ஜீரோ டிகிரி கோல் என்று பெயர். இந்த ஜீரோ டிகிரி கோல் அடித்த வீர்ரகளை விரல் விட்டு எண்ணிடலாம்.
ஜாம்பவான் வீரர்களான இங்கிலாந்தின் டேவிட் பெக்ஹாம், பிரான்சின் தியாரி ஹென்ரி, பிரேசிலின் ரொபர்டோ கார்லோஸ் தற்போதைய ஜெர்மனி அணியின் நட்சத்திர வீரரான டோனி கிரோஸ் ஆகியோரது வரிசையில் 10 வயது கேரள சிறுவனும் இணைந்துள்ளார்.
கேரளா மாநிலம் கோழிகோடு மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் பி.கே டேனிஷ் தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்துவருகிறார். சிறுவதியிலிருந்து கால்பந்து மீது அதீத ஈர்ப்பு கொண்ட இவர் பார்சிலோனா அணியின் தீவிர ரசிகர் ஆவார். மேலும், டேனிஷ் அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸியின் வெறித்தனமான ரசிகரும் கூட.
சமீபத்தில் கேரளாவில் சிறுவர்களுக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது. அதன் இறுதி போட்டியில் கேஎஃப்டிசி கிளப் அணிக்காக விளையாடிய டேனிஷ் கார்னர் கிக்கில் ஜீரோ டிகிரி கோல் அடித்துள்ளார். இந்த வீடியோவை முன்னாள் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் ஐ.எம். விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்ய அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Superb ..മോനെ… pic.twitter.com/EEXrlUPOWD
— I M Vijayan (@IMVijayan10) February 11, 2020
10 வயதில் ஜாம்பவான் வீரர்களை போல கார்னர் கிக்கில் கோல் அடித்த டேனிஷின் திறமையைக் கண்டு அனைவரும் புருவத்தை உயர்த்திவருகின்றனர். கார்னர் கிக் உள்பட டேனிஷ் ஹாட்ரிக் கோல் அடித்து அணியை வெற்றிபெற்றச் செய்தார். இந்தத் தொடரில் 13 கோல்களை அடித்து தொடர்நாயகன் விருதையும் அவர் வென்றுள்ளார்.
10 வயதில் இத்தகைய திறமை கொண்ட டேனிஷை செல்லமாக மெஸ்ஸி என்று அழைத்துவருகின்றனர். டேனிஷின் கால்பந்து மீது கொண்ட ஆர்வம் குறித்து அவரது தாயார் கூறுகையில்,
“கால்பந்து மீது மட்டும்தான் டேனி முக்கியத்துவம் அளிக்கிறார். அவருக்கு மற்ற விஷயங்கள் எல்லாமே கால்பந்துக்கு அடுத்துதான். இதனால், நாங்கள் அவருக்கு ஆதரவு தந்துவருகிறோம். டேனியின் கனவு புகழ்பெற்ற கால்பந்து வீரராக வலம்வர வேண்டும் என்பதுதான். அவரது முயற்சிகளும் திறமையும் அவரை சிறந்த கால்பந்து வீரராக மாற்றும் என நம்புகிறேன்” என்றார்.
சிறுவயதிலேயே டேனிஷ் கால்பந்து மீது அதீத திறன் கொண்டதால், கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ஆனபரம்பைல் உலகக் கோப்பை (Aanaparambile world cup) படத்தில் நடத்துள்ளார். இந்த படத்தில் ஐ.எம். விஜயன், முன்னாள் இந்திய வீரர் ஜோ பால் அன்சேரி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் மே மாதம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.