திருப்பூரை காக்க கடையடைப்பு போராட்டம் நடத்த தயங்க மாட்டோம் என்று இந்து முன்னணியின் மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் கொங்கு பகுதியை சேர்ந்த இந்து முன்னணியின் கோட்ட செயலாளர் மோகன சுந்தரம் என்பவர் அவரது காரை வீட்டு முன் நிறுத்தி விட்டு உள்ளே சென்று இருந்த சமயத்தில் அங்கே வந்த மர்ம நபர்கள் கார் மீது தீ வைத்துக் கொளுத்தி சென்றனர். இதில்,
கார் முழுவதும் எரிந்து கருகியது. இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்க சிசிடிவி காட்சிகளில் மர்ம நபர்கள் பதிவாகி இருந்தன. ஆனால் இதுவரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இந்து முன்னணியினர் நேற்று திருப்பூரில் காவல்துறையினரை கண்டித்தும், மர்ம ஆசாமிகளை உடனடியாக கைது செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவிற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் சி சுப்பிரமணியம், திருப்பூரில் எங்களது இந்து முன்னணியைச் சேர்ந்த நபரின் கார் தீ வைத்து எரிக்கப்பட்டது. அதற்கு ரசாயன பொருட்களை மர்ம நபர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இதுபோன்ற ஆபத்தான பொருட்களை கையாளும் பயங்கரவாதிகள் திருப்பூரில் இருக்கிறார்கள் என்பது ஐயத்தை ஏற்படுத்துகிறது. எனவே திருப்பூரை பாதுகாக்க வேண்டியது இந்து முன்னணியின் கடமை. காவல்துறையினரை எத்தனையோ முறை வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல்,
பயங்கரவாதிகளை கைது செய்யாமல் இருக்கிறார்கள். இதனால் திருப்பூருக்கு ஆபத்து ஆகவே திருப்பூரை காக்க கடையடைப்பு நடத்த தயங்க மாட்டோம் என்றும், மிக விரைவில் காவல்துறையை கண்டித்து மிகப்பெரிய பேரணி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.