Categories
தேசிய செய்திகள்

வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை… ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை… ஆந்திர அரசு அதிரடி!

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் யாராவது ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்படவுள்ளது.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இன்று  அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் நிறைவடைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நானி, அடுத்த மாதம் (மார்ச்) 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேலும் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளதாக கூறிய அவர், தேர்தலில் வெற்றிபெற வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம், மதுபானம் உள்ளிட்டவற்றை வழங்கும் போது, கையும், களவுமாக மாட்டிக்கொண்டால்  அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் வெற்றிக்கு பின் முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் பதவி பறிக்கப்படும் என்றும் கூறினார். இந்தக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கான சிறைத் தண்டனை தற்போது 3 முதல் 6 மாதங்களாக இருக்கின்ற நிலையில், இனிமேல் 3 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Categories

Tech |