தென் பெண்ணை ஆற்று நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கன மழையால் கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,400 கன அடியாக இருந்தது. இதன் காரணமாக அணையிலிருந்து வினாடிக்கு 10,800 கன அடி தண்ணீர் தென் பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதையடுத்து பிற்பகலில் நீர் வரத்து மேலும் அதிகரிக்க துவங்கியது. அந்த வகையில் மதியம் 1 மணி நிலவரப்படி அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 16,250 கன அடியாக அதிகரித்தது. பிறகு அணையில் வெள்ள அபாயஎச்சரிக்கை சங்கு ஒலிக்கப்பட்டு அணையின் பிரதான 8மதகுகள் திறக்கப்பட்டது. அடுத்து அணைக்கு வரும் தண்ணீரானது அப்படியே வெளியேற்றப்பட்டது.
இதன் காரணமாக அணையிலிருந்து மதகுகள் வழியே தண்ணீர் சீறி பாய்ந்து சென்றது. கிருஷ்ணகிரி அணையிலிருந்து வினாடிக்கு 16,250 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி அணைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் அவர் நிருபர்களிடம் பேசியதாவது:- கிருஷ்ணகிரி அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 16,250 கன அடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. இந்த தண்ணீர் முழுதும் பிரதானமதகுகள் வழியே வெளியேற்றப்படுகிறது.
இதனால் பெரியமுத்தூர், திம்மாபுரம், சுண்டேகுப்பம், காவேரிப்பட்டணம், கால்வே அள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுட்டஅள்ளி, தளிஅள்ளி போன்ற கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அத்துடன் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் போன்ற 5 மாவட்டங்களுக்கு தென் பெண்ணை ஆற்றின் கரை ஓரத்தில் தாழ்வான பகுதியிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு போக அறிவுறுத்தப்படுகிறது. தென் பெண்ணை ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் ஆற்றை கடக்ககூடாது.
அணையின் பாதுகாப்பு கருதி நீர் முழுதும் அணையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டி இருப்பதால் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வாயிலாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்மழை பெய்து வருவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையில் 37 இடங்கள் ஆபத்தான பகுதியாக கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக மணல் மூட்டைகள், பாதுகாப்பு உபகரணங்கள், தீயணைப்புதுறை, காவல்துறை, ஊரக வளர்ச்சி துறை, வருவாய் துறை அலுவலர்கள் வாயிலாக குழு அமைக்கப்பட்டு அனைத்து தாலுகாவிலும் 37 குழுவினர் தயார் நிலையில் இருக்கின்றனர்” என கலெக்டர் கூறினார்.