குடும்ப கட்டுப்பாட்டு ஆபரேஷன் செய்து கொண்ட பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரங்காரட்டி மாவட்டம் இப்ராஹிம் பட்டினத்தில் ஒரு அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் பெண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் 34 பெண்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்யப்பட்டது. இந்த ஆப்ரேஷன் முடிவடைந்த சிறிது நேரத்தில் அடுத்தடுத்து 4 பெண்கள் பலியானார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்களின் உறவினர்கள் மருத்துவமனையின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அரசு உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 5 லட்சம் நிதி உதவியும், ஒரு வீடும் வழங்குவதாக அறிவித்தது. அதோடு உயிரிழந்த பெண்களின் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மருத்துவமனையில் டீன் இடைநீக்கம் செய்யப்பட்டதோடு, ஆப்ரேஷன் செய்த மருத்துவர்களின் உரிமமும் பறிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆபரேஷன் செய்யப்பட்ட 30 பெண்களின் உடல் நிலையும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதோடு, மருத்துவமனையின் மீது விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.