சென்னை மாநகராட்சி 146 வது வார்டில் பூந்தமல்லி நெடுஞ்சாலை மதுரவாயல் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் அம்மா உணவகம் கட்டிடம் செயல்பட்டு வருகிறது. அந்த கட்டிடம் கடந்த 2013 ஆம் ஆண்டு அம்மா உணவகம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த அம்மா உணவகத்தின் கட்டிடம் கடந்த வருடம் பெய்த கனமழையின் காரணமாக சேதமடைந்து சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த அம்மா கட்டிடத்தில் உணவகத்தின் அருகில் இ-சேவை மையம் கட்டிடம் கடந்த ஒரு வருடமாக செயல்பட்டு வருகிறது. இந்த அம்மா உணவகத்தில் சமைத்து பார்சலாக மட்டுமே வழங்கப்படுகிறது. அங்கேயே அமர்ந்து சாப்பிடும் வசதி இல்லை.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி இந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு அங்கு மாடர்ன் டாய்லெட் கட்டுவதற்கு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதன் முறையாக துவக்கப்பட்ட இந்த அம்மா உணவக கட்டிடம் இடிக்கப்படுவதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், பழைய அம்மா உணவக கட்டிடத்தை சரி செய்து அதில் மீண்டும் உணவு செயல்பட நடவடிக்கை எடுத்ததால் மட்டுமே கட்டிடத்தை இடிக்க அனுமதிப்போம் என்று கூறியுள்ளனர். மேலும் அம்மா உணவகம் மீது ஆரம்பம் முதலே வெறுப்பு கொண்டுள்ள சென்னை மேயர் பிரியா திட்டமிட்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக குற்றசாட்டை முன்வைக்கும் மதுரவாயல் மக்கள் மாநகராட்சி தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.