புதியதாக பாதுகாப்பு காரணங்களை காட்டி டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்திலிருந்து எலான்மஸ்க் வெளியேற உள்ளதாக தெரியவந்துள்ளது. பிரபல சமூகஊடகமான டுவிட்டரை உலகின் மிகப் பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் ரூபாய்.3.3 லட்சம் கோடிக்கு வாங்க சென்ற மார்ச் மாதம் ஒப்பந்தம் செய்தார். இதையடுத்து டுவிட்டரிலுள்ள பல லட்சம் போலி கணக்குகளின் விபரங்களை கேட்டார்.
எனினும் டுவிட்டர் நிர்வாகம் இதனை முழுமையாக தர மறுத்ததால், அதை வாங்கும் முடிவிலிருந்து எலான்மஸ்க் பின் வாங்கினார். அதன்பின் அவர் மீது டுவிட்டர் நிர்வாகம் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து வழக்கு தொடர்ந்தது. இதற்கிடையில் டுவிட்டரின் முன்னாள் தலைமை பாதுகாப்பு அதிகாரி பீட்டர் ஜாட்கோ, “டுவிட்டர் நிறுவனம் தன் மோசமான இணைய பாதுகாப்பு, தவறான தகவல்களை பரப்பும் போலி கணக்கு
களை ஒழித்து கட்டும் முயற்சியில் தனது பயனர்களை தவறாக வழிநடத்தியது” என கூறியிருந்தார். இதனை பயன்படுத்திக்கொண்ட எலான்மஸ்க், ஜாட்கோ கூறிய பாதுகாப்பு குறைபாடுகளை காரணமாக காட்டி டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கு முயற்சித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரின் தலைமை சட்ட அதிகாரி விஜய காடேவுக்கு எலான்மஸ்க் தரப்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில் “டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவில், ஜூலை முடிவு அறிவிப்பு எக்காரணத்திற்காகவும் செல்லாது என தீர்மானிக்கப்பட்டால், ஒப்பந்தத்தை முடிக்க ஜாட்கோவின் குற்றச்சாட்டுகள் எலான்மஸ்கிற்கு கூடுதல் காரணங்களாக இருக்கும்” என கூறப்பட்டுள்ளது.