Categories
மாநில செய்திகள்

பட்ஜெட் உரையில் நிதிக்குழு குறித்த நிதியமைச்சரின் கவனிக்கத்தக்க பேச்சு!

தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் 15ஆவது நிதிக்குழுவின் அறிக்கை குறித்துப் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மத்திய அரசின் வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்குக் கொடுக்க வேண்டிய நிதி எவ்வளவு, மாநிலங்களுக்குள் அதனை எவ்வாறு பகிர்ந்தளிப்பது ஆகியவற்றை தீர்மானிப்பது நிதிக்குழு. 15ஆவது நிதிக்குழு, 2020-2021ஆம் நிதியாண்டுக்கான தனது இடைக்கால அறிக்கையை பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

நிதியை ஒதுக்க மாநிலங்களின் மக்கள்தொகையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. முந்தைய நிதிக்குழுக்களைப் போல 1979 மக்கள்தொகை கணக்கை எடுத்துக்கொள்ளாமல், 15ஆவது நிதிக்குழு 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கில் எடுத்துக்கொள்கிறது. இதனால் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்குக் குறைவான நிதியே கிடைக்கும்.

இதனால் 15ஆவது நிதிக்குழு பங்கீடு தமிழ்நாட்டுக்கு எதிராக அமையும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக 2020-21ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தபோது பேசிய நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், ‘ 15ஆவது நிதிக்குழு அறிக்கை பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் பங்கு 4.023 விழுக்காடில் இருந்து 4.189 விழுக்காடாக அதிகரித்துள்ளது. கடந்த நிதிக்குழுக்களில் தமிழ்நாட்டின் பங்கு தொடர்ந்து, குறைந்து வந்த போக்கு மாற்றம் அடைந்துள்ளது.

இருப்பினும், கடந்த கால அநீதிகளுக்கு, குறிப்பாக 14ஆவது நிதிக்குழு இழைத்த பாதிப்புகளுக்கு இது முழுமையாகப் பரிகாரமாகாது. தமிழ்நாடு போல சிறப்பாக நிர்வகிக்கப்படும் மாநிலத்திற்குச் சரியான கணக்கீடுகள் மூலம் போதிய நிதிப்பங்கீடு, வழங்கத் தொடர்ந்து 15ஆவது நிதிக்குழுவிடம் வலியுறுத்தப்படும்.

தமிழ்நாட்டுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக 4,025 கோடி ரூபாய் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை மானியம் வழங்க வேண்டும் என்ற நிதிக்குழுவின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருந்தாலும், அதற்கு 74,340 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு 30,000 கோடி ரூபாயை மட்டுமே ஒதுக்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |