Categories
அரசியல் மாநில செய்திகள்

‘பட்ஜெட்டில் வேளாண் மண்டலம் குறித்த தெளிவு இல்லை’ – திருமாவளவன்

தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் குறித்த தெளிவான அறிவிப்பு இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், ‘தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், அரசுக்கு ரூ.4.5 லட்சம் கோடி கடன் உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் கடனை அரசு எவ்வாறு அடைக்கப்போகிறது என்றோ அல்லது ஈடு செய்யப்போகிறது என்பது குறித்தோ அறிவிப்பு இல்லை.

கடலூர் மாவட்டத்திற்கான மருத்துவக்கல்லூரி குறித்த அறிவிப்பையும், அண்ணாமலை பல்கலைக்கழத்தை அரசே ஏற்று நடத்தும் என்ற அறிவிப்பையும் வரவேற்கிறோம்.

டெல்டாப் பகுதிகளை வேளாண் மண்டலமாக தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த நிலையில், பட்ஜெட் உரையில் அது குறித்த உறுதிப்படுத்தும்படியான எந்தத் தகவலும் இடம்பெறவில்லை. டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருக்கும் என்று உறுதியாக கூறாமல், ‘டெல்டாவைப் பாதுகாக்கப் பாடுபடுவோம்’ என்றே நிதியமைச்சர் கூறியிருக்கிறார்.

ஏற்கெனவே டெல்டா மாவட்டங்களில் ஒஎன்ஜிசி, வேதாந்தா ஆகிய நிறுவனங்களுக்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க வழங்கப்பட்டுள்ள அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் அறிவிக்கப்படவில்லை. எனவே, இந்த அறிவிப்பில் தெளிவு இல்லை என்றும், இந்த அறிவிப்பை அதை நடைமுறைப்படுத்த எந்தவித நடவடிக்கையும் இல்லை’ என்றும் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்குத் தரவேண்டிய ஐந்தாயிரம் கோடி ரூபாய் நிதி நிலுவையில் உள்ளன. ஆனால் அதனை இன்னும் கேட்டுப் பெறாமல் பட்ஜெட்டில் வெறும் அறிவிப்பாகவே சொல்லப்பட்டிருக்கிறது.

தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்காக 3,800 கோடியிலிருந்து 4,100 கோடியாக வரை உயர்த்தி ஒதுக்கி இருப்பது போதுமானதாக இல்லை என்றாலும், ரூ.300 கோடி உயர்த்தியிருப்பது வரவேற்கத்தக்கது. மொத்தத்தில் தமிழ்நாடு அரசின் இந்த கவர்ச்சிகர பட்ஜெட்டை நடைமுறைப்படுத்த முடியுமா என்பதை தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும். இது ஏமாற்றம் அளிக்கக்கூடிய பட்ஜெட்’ என்றார்.

ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான 11 பேர் தகுதி நீக்கம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்துள்ளது எதிர்பார்த்த ஒன்றுதான். மேற்கு வங்கம், கேரளா, புதுவை அரசுகளைப் போன்று துணிச்சலாக தமிழ்நாடு அரசும் குடியுரிமை திருத்தச் சட்டம், என்பிஆர், என்ஆர்சி உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்பதை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Categories

Tech |