மதுரை மாவட்டம் சூர்யா நகரை சேர்ந்த காயத்ரி என்பவர் மதுரை ஹைகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் நான் சுப்பிரமணியன் என்பவரை திருமணம் செய்து கொண்டு சூர்யா நகரில் என்னுடைய கணவருடைய வீட்டில் வசித்து வருகிறேன். என்னுடைய கணவர் அவருடைய தந்தை அம்பிகாபதி மற்றும் அவருடைய தாயார் உட்பட குடும்பத்தினர் எனக்கு பல்வேறு விதமான இடையூறுகளை செய்து வந்தார்கள். இந்நிலையில் என்னுடைய மாமியார் மற்றும் மாமனார் இணைந்து மாவட்ட முதியோர் பாதுகாப்பு அதிகாரியிடம் என்னுடைய மருமகள் எங்களை துன்புறுத்துவதாக கூறி புகார் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து மாவட்ட முதியோர் பாதுகாப்பு அதிகாரி என்னை வீட்டை விட்டு வெளியேறக் கூறியதோடு மாமனார் மாமியாரிடம் வீட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக காவல்துறையினர் என்னை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறுவதோடு, மாமனார் மாமியாரிடம் வீட்டை ஒப்படைக்குமாறும் கூறுகின்றனர். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் முன்னிலையில் வந்தது.
அப்போது நீதிபதி மாவட்ட முதியோர் பாதுகாப்பு அதிகாரி பிறப்பித்த உத்தரவு தவறானது. முதியோர் பாதுகாப்பு சட்டப்படி மருமகளை வீட்டை விட்டு வெளியேற்ற முடியாது. மூத்த குடிமக்கள் சட்டப்படி மாமனார் மற்றும் மாமியாருக்கு மருமகள் நேரடி வாரிசோ, ரத்த உறவோ கிடையாது. எனவே அதிகாரி கூறிய உத்தரவு மருமகளுக்கு பொருந்தாது என்று கூறி மாவட்ட முதியோர் பாதுகாப்பு அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.