ஆசியக்கோப்பையில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் எடுத்தது.
2022 ஆசியக் கோப்பையில் இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு இடையேயான நான்காவது லீக் போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக ரிசப் பண்ட் அணியில் இடம் பெற்றுள்ளார். இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா – கேஎல் ராகுல் களமிறங்கினர். ரோகித் சர்மா அதிரடியான தொடக்கத்தை கொடுத்த நிலையில், கே.எல் ராகுல் பொறுமையாக ஆடினார்.
அதன் பின் அதிரடியாக 13 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆடி வந்த ரோகித் சர்மா ஆயுஷ் சுக்லா வீசிய 5ஆவது ஓவரின் கடைசி பந்தில் ஐசாஸ் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.. அதன்பின் விராட் கோலி – கே எல் ராகுல் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினர். இதையடுத்து தட்டி தட்டி ஆடிவந்த கே எல் ராகுல் 36 (39) ரன்களில் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார். அப்போது இந்திய அணி 12.6 ஓவரில் 94/2 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பின் உள்ளே வந்தார் சூர்யகுமார் யாதவ்.. விராட் கோலியுடன் சூரியகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக ஆடியது.. குறிப்பாக சூரியகுமார் யாதவ் அதிரடியாக பவுண்டர்களை விளாசினார். கோலியும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்..
அதேபோல சூர்யகுமார் யாதவும் அரைசதம் கடந்த நிலையில், இறுதியில் கடைசி ஓவரில் தொடர்ச்சியாக முதல் 3 பந்தில் 3 சிக்ஸர்கள் உட்பட 4 சிக்ஸர்களை மைதானத்தின் நாலாபுறமும் விளாச 26 ரன்கள் கிடைத்தது.
இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 6 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 68 ரன்களுடனும், விராட் கோலி 44 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்ஸர்களுடன் 59 ரன்களும் எடுத்தனர்.. இதையடுத்து ஹாங்காங் அணி களமிறங்கி தற்போது விளையாடி வருகிறது.. அந்த அணி 10 ஓவரில் 65/2 என்று ஆடி வருகிறது..