தேசிய குற்ற ஆவண மையம் ஒரு அறிக்கை தயார் செய்து வெளியிட்டுள்ளது. அதில் போலீஸ் ஸ்டேஷன்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் இந்தியாவில் தமிழகம் தான் முதலிடத்தில் இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தமிழகத்தில் 20% வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. கடந்த வருடம் இந்தியா முழுவதும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் 53 லட்சத்து 61 ஆயிரத்து 707 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இதில் தமிழகத்தில் 10 லட்சத்து 62 ஆயிரத்து 909 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்குகள் கடந்த அதிமுக ஆட்சியின் போது கொரோனா விதிமுறைகளை மீறியதாக பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் என்று எம்.பி ரவிக்குமார் கூறியுள்ளார்.
இந்த கொரோனா விதிமுறைகளை மீறியதாக கூறி தமிழகத்தில் 15 லட்சம் பேர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது. அதன்படி 8 லட்சத்து 91 ஆயிரத்து 700 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அதன் பிறகு உத்திர பிரதேச மாநிலத்தில் 3 லட்சத்து 55 ஆயிரத்து 110 வழக்குகளும், கர்நாடகாவில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 350 வழக்குகளும், ஆந்திராவில் 1 லட்சத்து 88 ஆயிரத்து 997 வழக்குகளும் நிலுவையில் இருப்பதாக அறிக்கை சொல்கிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டின் இறுதி வரை தமிழகத்தில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 641 வழக்குகள் புலன் விசாரணையில் இருக்கிறது.
இந்நிலையில் கடந்த வருடம் கொரோனா விதிமுறைகளை மீறியதாக பொதுமக்கள் மீது பதியப்பட்ட வழக்குப்பதிவுகள் திரும்ப பெறப்படும் என டிஜிபி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளனவா? வழக்குகள் ரத்து செய்யப்பட்டனவா? அதன் நிலை என்ன? என்று ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ரவிக்குமார் தமிழக காவல்துறையினர் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும், அதிகாரத்தை போலீசார் கையில் கொடுத்தால் மக்களுக்கு எதிராக எப்படி எல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.