தேனி அருகே மின்கம்பத்தை கழிவுநீர் சூழ்ந்துள்ளதால் மின்சாரம் தாக்கும் அபாயம் இருப்பதாக ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 21வது வார்டு பகுதியில் உள்ள லோயர்கேம்ப் காலனி பகுதி தேனி to கொல்லம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் அமைந்துள்ள வீடுகள் அனைத்தும் ரோட்டோரமாகவே அமைந்துள்ளன. இருப்பினும் தாழ்வான பகுதிகளில் இருப்பதால் கழிவுநீர் செல்வதற்கான போதுமான வசதி ஏற்படுத்தப்படவில்லை.
மழைக்காலங்களில் மழை நீரும், கழிவு நீரும் கலந்து வீட்டிற்குள் வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை தானாக முன்வந்து கழிவுநீர் செல்வதற்கான பாதை அமைத்து வந்தது. இதையடுத்து மின்கம்பங்களை மாற்றியமைத்தால் முழுமையாக கழிவுநீர் செல்வதற்கு கால்வாய் அமைத்து விடலாம் என்று தேசிய நெடுஞ்சாலை தெரிவித்த போதிலும், மின்வாரியத்துறை கம்பத்தை மாற்றியமைக்க முன்வரவில்லை.
இதனால் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டவே, கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நின்று உள்ளன. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் இருப்பதோடு, கழிவுநீர் மின் கம்பங்களை சுற்றி சூழ்ந்து இருப்பதால், மின் கம்பங்கள் அரிக்கப்பட்டு சாய்ந்து விழுந்து மிகப் பெரிய விபத்தை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மிக விரைவில் கால்வாய்களை அமைத்து மின் கம்பங்களை மாற்றி மக்களை பாதுகாக்க நெடுஞ்சாலை துறையும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.