அமெரிக்க ராணுவம் சுமார் 400 சினூக் ஹெலிகாப்டர்களின் செயலாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போயிங் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான சினூக் ஹெலிகாப்டர் அமெரிக்க ராணுவ வீரர்களை அழைத்துச் செல்லவும், சரக்குகளை ஏற்றிச் செல்லவும் 60 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அடிக்கடி எஞ்சின் தீப்பிடித்து விபத்துக்குள்ளாவதை தொடர்ந்து அமெரிக்க பாதுகாப்புப் படையில் பயன்பாட்டிலுள்ள 400 சினூக் ஹெலிகாப்டர்களையும் பயன்பாட்டிலிருந்து நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. ஆனால், இந்திய விமானப் படையில் 15 சினூக் ஹெலிகாப்டர்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், ஒட்டுமொத்தமாக அனைத்து சினூக் ஹெலிகாப்டர்களையும் அமெரிக்க ராணுவம் நிறுத்துவதற்கான முழு காரணத்தை தெரிவிக்குமாறு போயிங் நிறுவனத்திடம் இந்திய தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா அளிக்கும் விளக்கத்திற்கு பிறகு, இந்திய விமானப் படையும் சினூக் ரக ஹெலிகாப்டர் பயன்பாட்டை நிறுத்துவது குறித்து முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.