ரயில் தண்டவாளத்தில் இரும்பு கம்பியை வைத்து ரயிலை விபத்தில் சிக்கவைக்க முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த பெண் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். காசர்கோடு மாவட்டம் கஞ்சங்காடு அருகே கொட்டிகுளம்-திரிகண்ணாடு ரயில் பாதையில் இரும்பு அடுக்கு கொண்ட கம்பியை வைத்து ரயிலை விபத்தில் சிக்க வைக்க முயன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சியை சேர்ந்த வி. கனகவள்ளி (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். கடந்த 20ஆம் தேதி மாலை திரிகநாடு ரயில்வே தண்டவாளத்தில் இரும்பு தூண் போன்ற கம்பியை வைத்து ரயிலை விபத்தில் சிக்க வைக்க முயன்றுள்ளார். மாவட்ட போலீஸ் அதிகாரி வைபவ் சக்சேனா உத்தரவின் பேரில், பேக்கல் டி.ஒய்.எஸ்.பி சுனில்குமார் ரயில்வே பாதுகாப்பு படையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.
அதில், கைதான கனகவள்ளியும் அவரது குடும்பத்தினரும் பள்ளிக்கரை அர்லிகட்டா என்ற இடத்தில் தங்கி இரும்பு, பழைய பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வந்துள்ளனர். அப்போது, தண்டவாளத்தில் வைக்கப்பட்டுள்ள வளைவுத் தூணின் ஒரு இரும்பு கம்பியை துண்டுகளாக்கி எடுத்துச் செல்லும் வகையில், இந்த செயலை செய்துள்ளனர். அந்த வழியாக வந்த சரக்கு ரயிலின் இஞ்சின் டிரைவர் சுதாரித்துக்கொண்டு ரயிலை வேகம் குறைத்து நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தியதில், இரும்பு சேகரிக்கும் பெண் கனகவள்ளி சிக்கினார்.