அமெரிக்காவில் ஒரு இந்தியரே மற்றொரு இந்தியரை மத ரீதியாக புண்படுத்தும் வகையில் தாக்கி பேசியதால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய வம்சாவளியினரான கிருஷ்ணன் ஜெயராம் என்பவர் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு உணவகத்திற்கு சாப்பிட சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த இந்தியரான தேஜிந்தர் சிங், ஜெயராமனை இனரீதியாக தாக்கி பேசியிருக்கிறார்.
இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், தேஜிந்தர் சிங் கோபமடைந்து, ஜெயராமை, நீங்கள் அசிங்கமாக இருக்கிறீர்கள். இது இந்தியா கிடையாது. வெளியிடங்களுக்கு வர வேண்டாம். உனக்கு என்ன வேண்டும்? இந்து மதத்தை சேர்ந்த நீங்கள் அசிங்கமானவர்கள் என்று உங்களுக்கே தெரியும் என்று அநாகரீகமாக மனம் புண்படும் வகையில் இன ரீதியாக திட்டியிருக்கிறார்.
மேலும், ஜெயராம், இறைச்சி சாப்பிடாமல் இருந்ததை கூறி திட்டி, அவரின் முகத்தில் மாட்டிறைச்சியை எறிந்திருக்கிறார். அதன்பின் உணவக பணியாளர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து காவல்துறையினர், அங்கு சென்று இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு கடைசியாக தேஜிந்தர் சிங்கை கைது செய்தார்கள்.
அவர் மீது வெறுப்புணர்வு, இனவெறி தாக்குதல், அமைதிக்கு தீங்கு விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து ஜெயராமன் தெரிவித்ததாவது, அவரின் கடுமையான செயலைக் கண்டு பயந்துவிட்டேன். எனினும், அவர் இந்தியராக இருப்பதை அறிந்த பிறகு மிகவும் வேதனை அடைந்தேன் என்று கூறியிருக்கிறார்.