கோவையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்த இவர் கட்டிட பணியின் போது அங்கே வந்த 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் மத்திய சிறையில் கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த வாரம் சிறையில் வலிப்பால் துடித்த சுப்பிரமணியை காவல்துறையினர் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கைதிகள் வார்டில் அனுமதித்தனர். சிகிச்சை முடிந்தபின் ஓய்வில் இருந்த சுப்பிரமணியன் தப்பிக்க முயற்சி செய்துள்ளார். அதன்படி பாத்ரூம் செல்வதாக கூறி அதிகாலை 4 மணி அளவில் உள்ளே சென்ற கைதி மூன்று மணி நேரத்திற்கு மேலாகியும் திரும்பி வெளியே வரவில்லை.
சக கைதிகள் பாத்ரூமுக்குள் செல்ல முடியாமல் கூச்சலிட சந்தேகம் அடைந்த பாதுகாப்பு படை அதிகாரிகள் கதவை உடைத்து பார்த்தபோது அங்கே ஜன்னல் கம்பியை நெளித்து கைதி தப்பி ஓடியது தெரிய வந்தது. பின் மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட, சுப்பிரமணியன் மீது தப்பியோடிய வழக்கும் பதிவு செய்யப்பட்டு அவர் தேடப்பட்டு வருகிறார். மேலும் பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் மீது கவனக்குறைவாக இருந்து கைதியை தப்பவிட்டதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை உயரதிகாரி தெரிவித்துள்ளார்.