தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக பணக்கள்ளி, குளியாடா, ஆசனூர், திம்பம், பெஜலெட்டி, கோடிபுரம், தலமலை, தாளவாடி உள்ளிட்ட வனப்பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக வனப்பகுதியில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசனூர் பகுதியில் இருந்து கர்நாடகாவிற்கு செல்வதற்கு தரைப்பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தரைபாலம் வெள்ளம் காரணமாக தண்ணீரில் மூழ்கியதோடு பழமை வாய்ந்த மரம் ஒன்று பாலத்தின் மீது விழுந்ததால் பாலம் சேதமடைந்துள்ளது.
இதனால் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களின் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆசனூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் அதிகாரிகள் பாலத்தில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர். அதன் பின் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இதனையடுத்து ஒங்கல்வாடி பகுதியில் உள்ள சில வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
அதோடு பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களையும் மழை நீர் சூழ்ந்ததால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பயிர்கள் அழுகும் நிலையில் இருப்பதால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் இருக்கின்றனர். அதன் பிறகு குரும்பூர் பள்ளத்தில் மழை நீர் தேங்கியிருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஆபத்தை உணராமல் மக்கள் பள்ளத்தின் வழியாக செல்கின்றனர். மேலும் பவானிசாகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று விடிய விடிய மழை பெய்துள்ளதால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.