Categories
அரசியல் மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பிரசாத் திடீர் மறைவு

தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பிரசாத் உடல் நலக்குறைவால் இன்று மாலை உயிரிழந்தார். அவரது உடல் நாளை சொந்த ஊரில் தகனம் செய்யப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத் (67). இவர் அதிமுக கட்சி நிர்வாகியாக, தனது கட்சிப் பணியைத் தொடங்கி, 2001ஆம் ஆண்டு பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், இரு நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம், அனந்தபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று மாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

ராஜேந்திர பிரசாத் கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே, இடைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர். தக்கலை பக்கம் உள்ள பனைவிளையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு அல்போன்சாள் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ராஜேந்திர பிரசாத்தின் உடல் அவரது சொந்த ஊரான இடைக்கோட்டில் நாளை (பிப்.15) தகனம் செய்யப்படுகிறது.

Categories

Tech |