டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களின் வெற்றியை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா திரைப்படம் உருவாகியுள்ளது. விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். மேலும் கே எஸ் ரவிக்குமார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான்விஜய் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கின்றார். மேலும் இந்த படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றார்கள். இந்த சூழலில் கோப்ரா திரைப்படத்தின் 20 நிமிட காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது எனப்பட குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் மற்றும் அனைத்து தரப்பினர் வேண்டுகோளுக்கு இணங்க இந்த படத்தின் நீளம் குறைக்கப்பட்டு இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் நீளம் குறைக்கப்பட்ட படமாக இன்று மாலை முதல் திரையரங்குகளில் வெளியிடப்படும்.