போர்ச்சுக்கலில், இந்தியாவை சேர்ந்த கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் இடப்பற்றாக்குறையால் உயிரிழந்த நிலையில், சுகாதாரத்துறை மந்திரி பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
இந்தியாவை சேர்ந்த 34 வயதுடைய ஒரு பெண் போர்ச்சுக்கலுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். கர்ப்பிணி பெண்ணான அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. எனவே, அவரை பிரபல மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த மருத்துவமனையில் அவருக்கு குழந்தை பிறந்தது.
எனினும், குறை மாதத்தில் பிறந்திருக்கிறது. அந்த மருத்துவமனையில் குழந்தைகளை அனுமதிப்பதற்கான பிரிவில், இடம் இல்லை. எனவே, வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். அதன்படி, மற்றொரு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அந்த பெண்ணிற்கு மாரடைப்பு ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து, சாவ் பிரான்சிஸ்கோ சேவியர் மருத்துவமனையின் அவரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து, தீவிர சிகிச்சை மேற்கொண்டனர். எனினும், அவர் பரிதாபமாக பலியானார். இதனால், அந்நாட்டு சுகாதாரதுறைக்கு சிக்கல் ஏற்பட்டது. தகுந்த சேவையை அளிக்காமல், அலட்சியப்படுத்தியது தான் அந்த பெண்ணின் உயிரிழப்பிற்கு காரணம் என்று குற்றச்சாட்டப்பட்டது.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்ற, சுகாதாரத் துறை மந்திரியான மார்ட்டா டெமிடோ தன் பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும், அடுத்த மந்திரி நியமனம் செய்யப்படும் வரை, அவர் பதவியில் இருப்பார் என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும், மரியா டி பாத்திமா பொன்சேகா, அன்டோனியோ லசெர்டா சேல்ஸ் ஆகிய சுகாதாரத் துறையை சேர்ந்த செயலாளர்களும் ராஜினாமா செய்திருக்கிறார்கள்.