டி20 கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி நம்பர் 3 இடத்தை சூர்யகுமார் யாதவுக்கு வழங்க வேண்டும் என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
ஆசியக்கோப்பை தொடரில் நேற்று இரவு இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச முடிவு செய்ததை தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஹாங்காங் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி சூப்பர்-4 சுற்றுக்குள் நுழைந்தது.
இப்போட்டி இந்திய ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்திருந்தது என்றுதான் சொல்லவேண்டும். இதில் அபாரமாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 6 சிக்சர் 6 பவுண்டர்கள் என 26 பந்துகளில் 68 ரன்களை விளாசி தள்ளினார். அதேபோல இவருக்கு உறுதுணையாக விராட் கோலியும் சிறப்பாக ஆடினார். சமீப காலமாக பார்ம் இல்லாமல் தவித்த கிங் கோலி இந்த ஆட்டத்தில் அற்புதமாக ஆடினார். கோலி 44 பந்துகளில் 59 ரன்கள் (3 சிக்ஸர், 1 பவுண்டரி) எடுத்தார்.
இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் ஆடியது குறித்து பலரும் அவரை பாராட்டி புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.. ஆசிய கோப்பையில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியகுமார் யாதவ் ஐசிசி டி 20 தரவரிசையில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.. இதனை சுட்டிக்காட்டிய கௌதம் கம்பீர் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்ற ஒற்றை காரணத்திற்காக சமீபத்திய போட்டிகளில் தனது அபார பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி வரும் சூரியகுமார் யாதவை பின்னுக்கு தள்ளாமல் அவருக்கு விராட் கோலி நம்பர் 3 இடத்தை வழங்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.