பேரிடர் காலங்களில் மனிதர்கள் மட்டுமல்லாமல் கால்நடைகளையும் உயிருடன் மீட்க ஏற்பாடுகள் தயாராக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்று பேரிடர் மீட்பு செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் துறை அதிகாரிகள் பேரிடர் ஏற்படும் பொழுது மக்களை எவ்வாறு உயிருடன் மீட்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்கள். மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு முகாமில் தங்க வைத்து உணவு வழங்குதல் உள்ளிட்டவற்றை செயல் விளக்கத்துடன் செய்து காட்டி இருக்கின்றனர்.
புயல் அடிக்கும் பொழுது மின்கம்பம் சாய்ந்து விழுந்தால் அதை மீண்டும் நேராக நிறுத்தி மின் வினியோகத்தை சீர் செய்வது பற்றி மின்சார துறையினர் செய்து காட்டினார்கள். மேலும் சாலையில் மரங்கள் விழும்போது அதை உடனுக்குடன் எப்படி அகற்றுவது குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கின்றது. இதுபோல மாவட்டத்தில் ஐந்து இடங்களில் பயிற்சி முகாம்கள் நடைபெற்றிருக்கின்றது. மேலும் பேரிடர் காலங்களில் மனிதர்கள் மட்டுமல்லாமல் கால்நடைகளையும் உயிருடன் மீட்க அனைத்து நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.