தமிழகத்தில் திமுக அரசு பதவி ஏற்ற பிறகு பல்வேறு துறைகளில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இருந்தாலும் பள்ளிக்கல்வித்துறையில் அவ்வளவு பெரிதாக எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு ஆசிரியர்கள் மத்தியில் நிலவி வருகிறது. அது மட்டுமல்லாமல் மாற்றம் என்ற பெயரில் இல்லம் தேடி கல்வித் திட்டம், எண்ணும் எழுத்தும், பள்ளி மேலாண்மை குழு பணி, எமிஸ்,இணையதள பதிவுகள் என ஆசிரியர்களின் பணிச்சுமை நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருகிறதே தவிர நல்லது எதுவும் நடந்த பாடில்லை.
இதனால் ஆசிரியர்களுக்கு கூடுதலாக எதையும் வாரி வழங்காவிட்டாலும் தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளை மட்டும் ஆவது நிறைவேற்றி தர வேண்டும் என்று பள்ளி ஆசிரியர்கள் கூறி வருகின்றனர். இதனிடையே வருகின்ற பத்தாம் தேதி ஜாக்டோ ஜியோ நடத்தும் ஆசிரியர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.அதில் ஆசிரியர்கள் யாரும் முதல்வர் முன்பு குறைகளை சொல்லி விடக்கூடாது என்பதில் பள்ளிக்கல்வித்துறை உறுதியாக உள்ளது.
இதனால் மாநாட்டிற்கு முன்பே ஆசிரியர்கள் வலியுறுத்தும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அதனை மாநாட்டில் அறிவிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தி முடிவுகள் எடுக்க திட்டமிட்டுள்ளார். இதன் மூலமாக மாநாட்டிற்கு முன்னதாக அல்லது மாநாட்டு மேடையில் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் முக்கிய அறிவிப்புகள் வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.அதிலும் குறிப்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற முக்கிய கோரிக்கை நிறைவேற்றப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.