கடலூர் மாவட்டம் தச்சம்பாளையம் கிராமத்த்தில் வசித்து வருபவர் ஆரோக்கிய ஜெபராஜ். இவர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது மனைவி ஜெஸ்ஸி ஜெனிபர் பிரசவத்திற்காக நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு புதுசத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்ந்தார். அப்போது அங்கு மருத்துவர்கள் இன்றி செல்போன் வாயிலாக பிரசவம் பார்க்கப்பட்டதால் குழந்தை இறந்து பிறந்ததாக தெரிவித்துள்ளார். அதாவது ஜெபராஜின் மனைவி ஜெஸ்ஸி ஜெனிபருக்கு காலை 11:15 மணிக்கு ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது.
மருத்துவர்கள் யாரும் இன்றி 2 செவிலியர்களும், 2 உதவியாளர்களும் சேர்ந்து அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர். அதன்பின் பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவர் பணிக்கு வராமல் செல்போன் வாயிலாக செவிலியர்கள் மற்றும் உதவியாளர்களிடம் பேசி பிரசவம் பார்க்கப்பட்டது என புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே குழந்தை இறந்தற்கு காரணமான 2 நர்சுகள், 2 உதவியாளர்கள் மற்றும் மருத்துவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சத்திரம் காவல்துறையினர் சந்தேகம் மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.