திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகின்ற 27ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக இந்த விழா நடைபெறாமல் இருந்த நிலையில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு தற்போது நடைபெற உள்ளது.அதனால் பிரமோற்ச விழாவில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே பக்தர்களின் வசதிக்காக தமிழக மற்றும் ஆந்திர மாநில அரசு போக்குவரத்து சார்பாக 300 பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம் சார்பாக 150 பேருந்துகளும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பாக 150 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
அதன்படி சென்னையில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக திருமலைக்கு 30 பேருந்துகளும், சென்னை காளகஸ்தி வழியாக 55 பேருந்துகளும், திருவண்ணாமலையில் இருந்து வேலூர் வழியாக 20 பேருந்துகளும், வேலூர் சித்தூர் வழியாக 65 பேருந்துகளும், கன்னியாகுமரி, திருச்சி,சேலம் மற்றும் ஓசூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வேலூர் வழியாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றது.அதனைப் போலவே புதுச்சேரி மற்றும் காஞ்சிபுரத்திலிருந்து திருத்தணி வழியாக ஆந்திர மாநில பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.