கோவில் வழிபாடுகளில் சாதி, நம்பிக்கை, நிற அடிப்படையில் பாகுபாடு பார்க்கக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அய்யனார், கருப்பூர் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக மேல்முறையீட்டு வழக்கில் இந்த கருத்தை நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள். அதோடு கோவில் என்பது அனைத்து பக்தர்களுக்கும் பொதுவான வழிபாட்டு தளம், கடவுள் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் கடவுளை வழிபட அனைத்து உரிமைகளும் உண்டு என்ற கருத்தையும் பதிவு செய்திருக்கிறார்கள்.
வழக்கின் பின்னணி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகாவில் உள்ள அய்யனார், கருப்பூர் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கூறி மதிமுருகன் என்பவர் மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயணன் பிரசாத் அமர்வு,
கோவில் ஒரு வழிபாட்டு தளம். கோவில் அனைத்து பக்தர்களும் பொதுவானது. கடவுள் நம்பிக்கை உள்ள அனைவருக்கும் கோவில்களில் வழிபாடு செய்ய உரிமை உள்ளது. ஒருவரின் சாதி, நம்பிக்கை, நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் எவ்விதமான பாகுபாடும் பார்க்கப்படக்கூடாது.
இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இந்த வழக்கில் பட்டியலின சமூகத்தின் மற்றும் பழங்குடியினர் உட்பட அனைத்து சமூகத்தினரையும் இணைத்து விழா கொண்டாடுமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அனைத்து சமூகத்தினரும் ஒன்றாக இணைந்து அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தார்.