பாகிஸ்தான் நாட்டில் மூன்றில் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அந்நாட்டு மந்திரி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் தென்மேற்கு பருவமழையையொட்டி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்த மழைப்பொழிவினால் நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த வெள்ளத்தினால் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர். பாகிஸ்தானில் கொட்டி தீர்த்த கனமழை , வெள்ளத்துக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை அறிவித்து, மீட்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி வருகின்றது. இதனை தொடர்ந்து பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் விளைவாக பாகிஸ்தானின் மூன்றில் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளதாக அந்நாட்டின் பருவநிலை மாற்றத்துறை மந்திரி ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மேலும் அந்நாட்டு மக்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.