கண்டெய்னர் மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான நிலையில், 9 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் எல்.என்.டி நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் 9 பேர் சென்னை துறைமுகம் ஐந்தாவது நுழைவு வாயில் பகுதியில் இருந்து ஒரு வேனில் புறப்பட்டு சென்றுள்ளனர். இந்த வேன் திருவொற்றியூர்- எண்ணூர் விரைவு சாலை கே.வி.கே குப்பம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை வேன் ஓட்டுநர் முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் கண்டெய்னர் லாரியின் பக்கவாட்டில் பயங்கரமாக மோதி சுக்குநூறாக நொறுங்கியது.
இந்த விபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஏரோலின் ஸ்டீபன்(35) என்பவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து படுகாயமடைந்த வேன் ஓட்டுநர் சந்துரு உள்பட 9 பேரை போலீசார் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து ஸ்டீபனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய கண்டெய்னர் லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.