நெஞ்சுவலியால் துடித்த மூதாட்டியின் உயிரை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூரில் இருந்து அரசு டவுன் பேருந்து நேற்று மதியம் ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ராஜா(40) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக ராஜ்குமார்(38) என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் செம்புளிசாம்பாளையம் அருகே சென்றபோது திடீரென 60 வயது மூதாட்டி நெஞ்சுவலியால் துடித்தார். இதுகுறித்து தகவல் தெரிவித்தும் ஆம்புலன்ஸ் வர தாமதமானது. இதனால் ராஜா பேருந்தில் இருந்த 50 பயணிகளையும் கீழே இறக்கி விட்டார்.
பின்னர் பேருந்தை அந்தியூர் நோக்கி ஓட்டி சென்று மூதாட்டியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சரியான நேரத்தில் மூதாட்டிக்கு சிகிச்சை அளித்ததால் அவர் உயிர் பிழைத்தார். சரியான நேரத்தில் சாதூர்யமாக செயல்பட்டு மூதாட்டியின் உயிரை காப்பாற்றிய ராஜாவை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.