“அமெரிக்க வட்டி விகித உயர்வுகளும் மோசமடையும் சீனாவின் கட்டுமானத் துறைகளும்: மாற்று இல்லாத தருணத்தை இந்தியா அனுபவிக்கிறதா” என்ற தலைப்பில் எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கையை தலைமைப் பொருளாதார ஆலோசகர் சௌமியா காந்தி கோஷ் தலைமையிலான குழு எழுதியுள்ளது. இதுகுறித்து எஸ்.பி.ஐ., ஈகோராப் அறிக்கையில் கூறியது, சீனா தற்போது தெளிவான மந்தநிலையை எதிர்கொள்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். இதனால் நீண்ட கால நோக்கில் இந்தியா பயனடையும். உலகளவில் அனைத்து நாடுகளும் நெருக்கடியை எதிர்கொள்வதால், 2022-23ல் வளர்ச்சி மற்றும் விலைவாசி கண்ணோட்டத்தின் அடிப்படையில் இந்தியா சிறந்த இடத்தில் இருப்பதாகத் தெரிகிறது. இதனால் இந்தியா தனக்கு மாற்று இல்லாத ஒரு சூழலை அனுபவித்து வருவதாகத் தெரிகிறது.
அதனைத்தொடர்ந்து இந்தியாவுக்கு மாற்றாக சீனா இருந்தது. சீனாவும் கட்டுமானத் துறை வீழ்ச்சியின் பின்னணியில் இருண்ட கண்ணோட்டத்தை எதிர்கொள்வதால், இத்தகைய நம்பிக்கையைப் பகிர்கிறோம். மக்கள்தொகையினரின் வயது கூட குடும்பத்தின் அளவு படிப்படியாக குறையும். இதனால் நீண்டகால நோக்கில் பார்க்கும் போது ஜப்பானில் காணப்படுவது போல் சீனாவில் வீட்டுத் தேவை குறையும். இதனால் டிமாண்ட் கணிசமாக நீக்கப்படும். இதற்கிடையில் ஆப்பிள் அதன் முதன்மையான ஐபோன் 14 மாடல் பாகங்களின் ஒரு பகுதி உற்பத்தி சீனாவிலிருந்து இந்தியாவுக்கு மாற்றி சமீபத்தில் முடிவு எடுத்தது. சீனாவின் மந்தநிலையால் இந்தியா பயனடையும் என்ற நம்பிக்கைக்கு இது சாட்சியமாக உள்ளது. மற்ற பெரிய நிறுவனங்களுக்கும் இதைப் பின்பற்றி இந்தியாவை நோக்கி திரும்புவதற்கு வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். இன்னொரு சுவாரஷ்யமான விஷயம் என்னவென்றால் கட்டுமானத் துறையில் சீனா கடும் சரிவை எதிர்கொண்டிருக்கும் அதே காலக்கட்டத்தில் இந்தியா இந்தாண்டில் முதல் அரையாண்டில் வீடுகளின் விற்பனை 2013க்கு பிறகான உச்சநிலையை எட்டியுள்ளது. குறைந்த வட்டி விகிதங்கள், குறைந்த வீடு விலைகள், ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முதன்மையான தூண்டுதல்களாக உள்ளன.
இதனையடுத்து இந்தியாவில் வீடுகள் விற்பனை ஆண்டு அடிப்படையில் 60 சதவீதம் அதிகரித்து 158,705 யூனிட்களாக உள்ளன. இந்த விற்பனை 2021 ஆம் ஆண்டு இரண்டாம் பாதியை விட 19% அதிகமாகும். மறுபுறம், சீனாவின் கட்டுமானத் துறையின் நிதி நிலைமை தொடர்ந்து சரிந்து வருகிறது. சீனாவில் ஒரு காலத்தில் உள்கட்டமைப்பு மறுமலர்ச்சிக்கான நிறுவனமாக அறியப்பட்ட எவர்கிராண்டே குழுமம் கடன் சிக்கலில் மூழ்கியுள்ளது. மற்ற நிறுவனங்களும் அதே நிலைமையில் உள்ளது. முழுக்க முழுக்க தொழிலாளர்களை சார்ந்து இயங்கும் கட்டுமானத் துறையில் இயல்பான செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடுமையான ஜீரோ கோவிட் என்ற கொள்கையை சீனா கடைப்பிடித்தது. இது படிப்படியாக அந்த துறையை பாதித்தது. இதனை அப்போதே பல பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டினார்கள். அதே நேரத்தில் இந்தியாவில் நிலையான வழிகாட்டுதல்களுடன் தொழில் நிறுவனங்கள் இயங்க வழிவகை செய்யப்பட்டது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.