ஜனவரி 15 ஆம் தேதிக்குப் பிறகு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து திரும்பிய எழுபத்து நான்கு பயணிகள், ஒடிசா மாநில கண்காணிப்பு முறையால் அடையாளம் காணப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அலுவலர் தெரிவித்தார்.
அதில், குறிப்பிட்ட ஏழு நபர்களின் இரத்தம் சோதனைக்காக புனேவில் உள்ள வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவை அனைத்தும் எதிர்மறையாகக் கண்டறியப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
மாநில சுகாதார கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் மிகுந்த துரித கதியில் செயல்பட்டு வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த மக்களின் அச்சங்கள் ஐயங்கள் கேள்விகள் கட்டுப்பாட்டு அறையால் தீர்க்கப்படுகின்றன.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களை கையாள்வதற்காக ஒடிசா அரசு அம்மாநிலம் முழுவதும் உள்ள பிரதான மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளைத் திறந்து வைத்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புகள் தொடர்பான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து தலைமை மாவட்ட மருத்துவ உயர் அலுவலர்களுக்கும் (சி.டி.எம்.ஓ) தேவையான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக, அந்த சுகாதாரத் துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.
கொரோனா என்னும் கொடிய வைரஸ் பாதிப்பு கடந்த இரண்டு மாதங்களாக சீனாவை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக, இதுவரை சீனாவில் மட்டும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,380 ஆக உயர்ந்துள்ளது. 60,380 பேர் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் மனிதர்களிடமிருந்து எளிதாகப் பரவுகிறது என்பதால், இதைக் கட்டுப்படுத்த முடியாமல் சீனா திணறி வருகிறது என்பது இங்கே கவனிக்கத்தக்கதாகும்.