புகைபிடிப்பதில் அதிகம் இளம் வயதினரே பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் இவ்வாறான செயல்களுக்கு எப்படி அடிமையாகிறார்கள்…?
புகைப் பழக்கம் ஆரம்பித்த புதிதில், புகையை இழுத்த 10 வினாடிகளில், புகையிலையில் முக்கியமாக உள்ள நிகோட்டின் எனப்படும் ரசாயனம் மூளையைச் சென்றடைந்து ரசாயன மாற்றங்களை ஏற்படுத்திவிடும்.
அமைதியாகவும் அதிகக் கவனத்துடன் இருப்பது போலவும் உணரச் செய்கிறது. நாளடைவில் மூளை, உடலில் இயற்கையாகவே உள்ள ரசாயனங்களுக்குப் பதிலளிக்காமல் நிகோட்டினுக்குப் பழக்கப்பட்டு புகைக்காக ஏங்கத் துவங்குகிறது.
இந்த ஏக்கம், தலைவலி, கோபம், பதட்டம், மனச்சோர்வு, தூக்கமின்மை போன்றவையாக வெளிப்பட்டு, புகை பிடிக்கத் தூண்டி, நாளடைவில் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிடுகிறது.
ஆரம்பத்தில் ஒரு சிகரெட் பிடித்து ‘நன்றாக’ இருப்பதாக உணர்ந்தால், நாளடைவில் அதே உணர்வைப் பெற பல சிகரெட்டுகள் பிடிக்க வேண்டிவரும். பின்னர் இயல்பாக உணர்வதற்கே புகை பிடிக்க வேண்டிய கட்டாயம் வந்துவிடுகிறது.
நிகோட்டின் மட்டும் அல்லாது 4000 த்துக்கும் மேற்பட்ட கெடுதலான ரசாயனங்கள் சிகரெட்டில் உள்ளன. இவை நுரையீரலில் மட்டுமில்லாமல் உடலில் பல்வேறு பாகங்களிலும் புற்றுநோயையும் மற்ற நோய்களையும் ஏற்படுத்தக்கூடியவை.
ஓர் ஆய்வின்படி 70% மேற்பட்டோர் நண்பர்களின் உந்துதலினாலும், அவர்களின் வற்புறுத்தலுக்கு மறுப்பு தெரிவிக்கச் சிரமப்படுவதாலும் புகைபிடிக்க ஆரம்பிப்பதாகக் கூறப்படுகிறது.
பலர் லைட் சிகரெட், தாங்களே தயார் செய்தது அல்லது ஃபில்டர் சிகரெட் பிடிப்பதால் நச்சுப் பொருட்களைச் சுவாசிப்பதில்லை என்று நினைக்கிறார்கள். அது தவறு. அவர்களும் மற்றவர்களைப் போலவே அத்தனை நச்சுப் பொருட்களையும் சுவாசிக்கிறார்கள்.