ஒடிசா மாநிலம் ஜெய்ஜ்பூர் மாவட்டம் பண்டாஹரொன் பகுதியில் வசித்து வருபவர் சாந்தனு பிஹிரா(40). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதற்கிடையில் அடிக்கடி சாந்தனுவுக்கும், இவரது மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு அம்மா வீட்டிற்கு சென்றிருக்கிறார். சென்ற 3 மாதங்களாக அவர் தன் அம்மா வீட்டில் இருந்துள்ளார். அதன்பின் மனைவியை தன்னுடன் சேர்த்துவைக்க உதவுமாறு மனியாபாபர் ( 47) என்ற மந்திரவாதியிடம் சாந்தனு கேட்டுள்ளார்.
இதற்கென ரூபாய்.5 ஆயிரம் தரும்படி மனியா கூற, அப்பணத்தை சாந்தனு கொடுத்துள்ளார். இந்நிலையில் மந்திரவாதி உறுதியளித்தப்படி அம்மா வீட்டிற்கு சென்ற மனைவியை மீண்டும் சேர்த்து வைக்காததால் கொடுத்த ரூபாய்.5 ஆயிரம் பணத்தை திருப்பி தரும்படி சாந்தனு கேட்டுள்ளார். இதன்காரணமாக சாந்தனுவுக்கும், மந்திரவாதிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில், சாந்தனு தான் மறைத்துவைத்திருந்த கத்தியை கொண்டு மந்திரவாதி மனியாவை சரமாரியாக குத்தி இருக்கிறார்.
இதனால் ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்த சாமியார் மனியா பாபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மந்திரவாதி என கூறப்படும் மனியாபாபர் மராட்டியத்தை சேர்ந்தவர் என்பதும், அவர் தன் மனைவியுடன் வாடைகை வீட்டில் வசித்து வந்ததும் தெரியவந்தது. பின் மந்திரவாதி மனியாவை கொலை செய்த சாந்தனு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.