பெங்களூர் அருகே பிடதியில் உள்ள மடத்தில் பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளாகி தரைமறைவானவர் நித்தியானந்தா. நித்யானந்தா கைலாச எனும் தனித்தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக பலர் பேசி பரபரப்பை கிளப்பினர். அவரது பக்தர்களுக்கு அடிக்கடி இணையத்தில் தோன்றி உரையாற்றியும் வந்துள்ளார். இந்நிலையில் நித்தியானந்தா இறந்துவிட்டார் என்று தவறான செய்தி பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்து நித்தியானந்தா தரப்பில் இருந்து சில பதிவுகள் வெளியாகின.
தொடர்ந்து சில கருத்துக்களை பதிவிட்டு அவர் குரு பூர்ணிமா நாளான ஜூலை 13ஆம் தேதி மீண்டும் நேரில் தோன்றுவதாக அறிவித்தார். ஜூலை 13ஆம் தேதி குரு பூர்ணிமா நிகழ்வில் தோன்றி பக்தர்கள் மத்தியில் பேசினார். அப்போது தான் குணமடைந்து விட்டதாகவும் மறுபிறவி எடுத்துள்ளதாக பேசினார். இந்நிலையில் இலங்கையில் தனக்கு தஞ்சம் கொடுக்குமாறு அந்நாட்டு அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் பொருளாதார நெருக்கடியால் இலங்கை தவித்து வரும் நிலையில் அந்நாட்டு அதிபருக்கு நித்தியானந்தா எழுதியுள்ள கடிதம் தெரிவித்துள்ளதாவது “ஸ்ரீ நித்யானந்தா பரமசிவனுக்கு உடனடி மருத்துவ உதவி தேவைப்படுகிறது .கைலாசாவில் நித்யானந்தாவுக்கு போதிய சிகிச்சை அளிக்க முடியவில்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள உடல்நிலை குறைபாட்டை சரி செய்ய இலங்கையில் தஞ்சம் அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.