கழிவுநீர் தொட்டியில் விழுந்த காட்டெருமையை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டெருமையின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் பெரிய வண்டிசோலை பகுதியில் இருக்கும் தனியார் தேவை தோட்டத்தில் நடைபெறும் கட்டுமான பணிக்காக வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். அங்கு தற்காலிக கழிவுநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. நேற்று உணவு தேடி ஊருக்குள் நுழைந்த காட்டெருமை கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தது.
இதனை பார்த்த தொழிலாளர்கள் வனத்துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு காட்டெருமையை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.