விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலியாகியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெறையூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவருக்கு திலீப் என்ற மகன் இருந்தார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் சொல்லப்பட்டது. அந்த சமயத்தில் விநாயகரை எடுத்துச் செல்லும் வாகனத்தில் திலீப் அமர்ந்து இருந்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் திலீபை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் திலீப் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் வெறையூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.