முந்தைய ஆட்டத்தில் விராட் கோலி நன்றாக விளையாடியதில் மகிழ்ச்சியடைவதாக தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் தெரிவித்துள்ளார்..
ஆகஸ்ட் 27 ஆம் தேதி தொடங்கிய 2022 ஆசிய கோப்பை தொடரின் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இதையடுத்து நேற்று நடந்த முதல் சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தானை இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த நிலையில் 2022 ஆசியக் கோப்பையின் சூப்பர்4 சுற்றின் 2ஆவது போட்டியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் துபாயில் இந்திய நேரப்படி 7.30 மணிக்கு மோதவுள்ளது. இந்த சூழலில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் காயம் காரணமாக ஜடேஜா உலகக் கோப்பையை இழக்கும் சாத்தியம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த டிராவிட், பெரிய கிரிக்கெட் நிகழ்வுக்கு இன்னும் நேரம் உள்ளது “ஜடேஜாவுக்கு அவரது முழங்காலில் காயம் ஏற்பட்டதால் அவர் ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறினார். உலகக் கோப்பைக்கு இன்னும் நேரம் இருக்கிறது. எனவே, அவரை அதிலிருந்து விலக்கிவிட முடியாது. அவர் மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் உள்ளார். அதைப் பற்றி எங்களுக்கு தெளிவான படம் கிடைக்கும் வரை நான் அவரை நிராகரிக்கவோ அல்லது பல கருத்துக்களை வெளியிடவோ விரும்பவில்லை என்றார்.
மேலும் முழு அணியை உருவாக்க முயற்சிப்பதன் நோக்கம் அவர்கள் எந்த சூழ்நிலையிலும் விளையாட முடியும் என்பதே. நாளைய (இன்று) போட்டியில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எங்களிடம் சிறந்த பந்துவீச்சுத் தாக்குதலும் உள்ளது என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. ஒவ்வொருவரும் பல விஷயங்களை முயற்சி செய்து சாதிக்க மிகவும் ஆர்வமாக உள்ளனர். எங்களுக்கு இது மற்ற போட்டியை போல ஒரு போட்டி மட்டுமே. நாங்கள் வெற்றி பெற்றால், நல்லது. தோற்றால் பின்னர் இலங்கைக்கு எதிராக விளையாடுவோம். எங்களிடம் நிறைய தரமான வீரர்கள் உள்ளனர். பாகிஸ்தான் நல்ல ஃபார்மில் உள்ளது, ஆனால் நம்மை மேம்படுத்த இது போன்ற விளையாட்டுகள் தேவை. நீங்கள் வீரர்களை மதிப்பிட முடியும், மேலும் என்னிடம் உள்ள கேள்விகளுக்கு என்னால் நிறைய பதில்களைப் பெற முடியும் என்றார்.
மேலும் அவர் விராட் கோலி பற்றி கூறியதாவது, விராட் கோலி தனது ஆட்டத்தில் மகிழ்ச்சி அடைகிறார். “விராட் அல்லது எந்த வீரருடன் நான் என்ன உரையாடினேன் என்பதை என்னால் சொல்ல முடியாது. முந்தைய ஆட்டத்தில் அவர் நன்றாக விளையாடினார். ஒரு மாத இடைவெளிக்கு பின் அவர் திரும்பி வந்திருக்கிறார். அவருக்கு ஓய்வு கிடைத்ததில் மகிழ்ச்சி, அவர் இங்கிருந்து களமிறங்கி சிறப்பாக ஆடுவார் என்று நம்புகிறேன். விராட் சில பெரிய ஆட்டங்களை வெளிப்படுத்த ஆர்வமாக உள்ளார். அவர் சிறப்பாக செயல்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தொடர்ந்து அவர், கடந்த போட்டியில் கோலி விளையாடிய விதம் மிகவும் நன்றாக இருந்தது. ஒரு மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் வந்துள்ளார். அவருக்கும் மகிழ்ச்சி.நம்மை பொறுத்தவரை அவர் எவ்வளவு ரன்கள் அடித்தார் என்பது முக்கியமல்ல.எங்களுக்கு , அணி உண்மையில் வெற்றி பெறத் தேடும் போது ஒரு சிறிய பங்களிப்பு கூட முக்கியமானது” என்று டிராவிட் கூறினார். ஹாங்காங்கிற்கு எதிராக ஆட்டமிழக்காமல் 59* ரன்களையும், பாகிஸ்தானுக்கு எதிராக 35 ரன்களையும் கோலி அடித்து ஃபார்முக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.