திருவண்ணாமலை அருகே வீட்டின் பின் கள்ளத்தனமாக சாராயம் விற்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன்பாளையம் சமுத்திரம் பகுதியில் நேற்றைய தினம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஒரு தெருவில் உள்ள வீட்டில் ஆண்கள் சிலர் அதிக அளவில் வருவதும் போவதுமாக இருந்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறை அதிகாரிகளில் ஒருவர் மப்டியில் அங்கே சென்று பார்வையிட்டுள்ளார். அப்போது செல்வி என்கிற 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டின் பின்புறம் கள்ளத்தனமாக சாராயம் விற்றுக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறை அதிகாரிகள் அவரிடமிருந்த 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.