ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் அணிக்கு மாறப்போவதாக புது பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சினையானது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கடந்த மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி பொதுக்குழு கூட்டம் செல்லாது எனவும், எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது எனவும் தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு குழு விசாரித்தது. அப்போது கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் எனவும், இபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் எனவும் கூறினார். இதை இபிஎஸ் ஆதரவாளர்கள் மாநிலம் முழுவதும் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
ஆனால் உயர் நீதிமன்ற தீர்ப்பினால் கலக்கத்தில் இருக்கும் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் நாளை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கின்றனர். இந்நிலையில் ஓபிஎஸ் பக்கம் இருக்கும் ஆதரவாளர்கள் தங்களுடைய பதவிகளை காப்பாற்றிக் கொள்வதற்காக இபிஎஸ் அணிக்கு தாவுவதற்கு முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இபிஎஸ் கையே அதிமுகவில் தற்போது ஓங்கி இருப்பதால் இருக்கிற பதவியையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் பக்கம் செல்வதற்கு முடிவு செய்துள்ளதாக தெரிந்த வட்டாரங்கள் கூறுகிறது. மேலும் ஓபிஎஸ் தன்னுடைய ஆதரவாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.