Categories
மாநில செய்திகள்

மெட்ரோ ரயிலில் சைக்கிள்களை எடுத்துச் செல்ல அனுமதி : பயணிகள் உற்சாகம்!

மெட்ரோ ரயில் பயணத்தின் போது சைக்கிள்களை பயணிகள் தங்களுடன் எடுத்துச் செல்ல சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.

போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக கொண்டு வரப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ், தற்போது 42 கி.மீ தூர வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு வசதிகளை செய்து வரும் மெட்ரோ ரயில் நிர்வாகம், சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு சைக்கிள் வசதி, ஆட்டோ வசதி என பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் மெட்ரோ நிர்வாகம் தற்போது கூடுதலாக ஒரு சலுகையை அறிவித்துள்ளது.

அதாவது மெட்ரோ ரயிலில் சைக்கிள்களை கொண்டு செல்லலாம் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பயணிகள் தங்களது வீடுகளில் இருந்து கொண்டு வரும் சொந்த சைக்கிள்களையும், ஸ்மார்ட், மடக்கு சைக்கிள்களையும் மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லலாம் அந்த சைக்கிள் சிறியதாகவும், கையில் எடுத்துச் செல்ல வசதியாகவும் பிற பயணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் கொண்டு செல்லலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வாகனத்தை பொதுமக்கள் பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையிலும், மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் வீட்டில் இருந்து ரயில் நிலையத்திற்கு வரவும், ரயிலில் இருந்து இறங்கி அலுவலகம் சென்று சேரவும் மாற்று வாகனத்துக்கு அல்லது ஆட்டோவுக்கு செலவிடப்படும் தொகையைக் குறைக்கவும் இந்த வாய்ப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஏராளமான பயணிகள் தங்களது சைக்கிளை ரயிலில் கொண்டுச் செல்ல அனுமதிக்குமாறு தொடர்ந்து வைத்த கோரிக்கையை ஏற்று இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து பிற இடங்களுக்கு செல்லும் போக்குவரத்து செலவு குறைவதால் பொதுமக்கள் இந்த அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |