குஜராத் மாநிலத்தின் தபி மாவட்டத்தில் அம்பாக் கிராமத்திலுள்ள ஒரு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு படிப்புடன், பிற மாநில கலாசாரம் மற்றும் நடனம் போன்றவையும் பயிற்றுவிக்கப்படுகிறது. இது குறித்து சரஸ்வதி கன்யா வித்யாலயா என்ற பள்ளியின் ஆசிரியை ரீமா மைசூரியா செய்தியாளர்களிடம் பேசியதாவது, 4 வருடங்களாக இந்த மாணவிகளுக்கு, மிசோரம் பாரம்பரிய நடனம் என அழைக்கப்படும் சீரா நடனம் பயிற்றுவிக்கப்படுகிறது.
பழங்குடியின மாணவிகளுக்கு ஒரு புது கலாசார நடனம் அறிமுகம் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அந்த வகையில் இப்பயிற்சி அளிக்கிறோம். இந்த நடன நிகழ்ச்சிகளால் ஈட்டப்படும் வருவாயானது, இந்த மாணவிகளின் நலன்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இதனால் அவர்கள் இன்னும் சிறப்புடன் செயல்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து ஊர்வசி ஹல்பாதி என்ற மாணவி கூறியதாவது, இந்த நடனம் ஆடுவதில் மகிழ்ச்சியாக உள்ளது.
வெளியில் சென்று நடனநிகழ்ச்சியை நடத்தும்போது கிடைக்கும் பாராட்டுகள் எங்களை மகிழ்ச்சியடைய செய்கிறது என கூறியுள்ளார். இதேபோன்று மற்றொரு மாணவியான பிரியான்ஷி கமித் கூறும்போது, இந்த நடன நிகழ்ச்சியின்போது, மூங்கில் கம்புகளை சரியான முறையில் இயக்கவேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. இதற்காக 3 -4 மாதங்கள் வரை நாங்கள் பயிற்சி எடுத்து கொண்டோம். அத்துடன் பல கடின உழைப்பும், பயிற்சியும் இதற்கு தேவைப்படும். நடனமாடும்போது, ஆடுபவர்களுக்கு காயம் எதுவும் ஏற்பட்டுவிட கூடாது என்பதில் நாங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.