மயிலாடும்பாறையில் கடன் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
தேனி மாவட்டத்திலுள்ள மயிலாடும்பாறையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகின்ற நிலையில் இங்கு 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடன் வழங்குவதில் முறைகேடு நடைபெறுவதாக அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும் கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.
இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திய போது மயிலாடும்பாறை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் மற்றும் கரவை மாடுகளுக்கு கடன்கள் கேட்டு ஏராளமான விவசாயிகள் விண்ணப்பித்துள்ள நிலையில் வங்கி ஊழியர்கள் தேவையற்ற ஆவணங்கள் கேட்டு எங்களை அலைக்கழிப்பு செய்கின்றார்கள். மேலும் குறிப்பிட்ட சதவீத பணம் கொடுக்கும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து முறைகேடாக பயிர் கடன் வழங்குகின்றார்கள். ஆகையால் விண்ணப்பித்த விவசாயிகள் அனைவருக்கும் பாகுபாடு இன்றி கடன் வழங்க வேண்டும் என கூறினார்கள். இதைத்தொடர்ந்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்கள்.