இந்தியாவில் ஆசிரியர் தின விழா வருடம் தோறும் செப்டம்பர் 5-ஆம் தேதி கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு வாழ்த்து சொல்வது, முன்னாள் ஆசிரியர்களை நினைவு கூறுவது என பல்வேறு விதமான நிகழ்வுகள் அரங்கேறும். இந்த ஆசிரியர் தின விழா முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள் அன்று கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக ஆசிரியர் தின விழா என்றாலே ராதாகிருஷ்ணன் மட்டும் தான் பலரது நினைவிலும் வருவார். ஆனால் டாக்டர் ராதாகிருஷ்ணனை போன்றே தமிழகத்தில் வாழ்ந்து மறைந்த பல்வேறு சிறப்புமிக்க ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி சிறப்பு வாய்ந்த ஆசிரியர்களின் ஒருவரான சி. இலக்குனார் பற்றிய சில தகவல்களை தற்போது பார்க்கலாம்.
இவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் ஆசிரியர் என்று சொன்னால் பரலது நினைவுக்கும் வந்து விடுவார். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வாய்மேடு கிராமத்தில் குருநிலக்கிழார்-ரத்தினதாச்சி தம்பதியரின் மகனாக சி. இலக்குவனார் பிறந்தார். இவருடைய இயற்பெயர் லட்சுமணன். ஆனால் தமிழ் மொழியின் மீது கொண்ட அதீத பற்றின் காரணமாக தன்னுடைய பெயரை இலக்குவனார் என்று மாற்றினார். இந்நிலையில் 8-ம் வகுப்பு வரை திண்ணைப் பள்ளியிலும், அரசு பள்ளியிலும் படித்த இலக்குவனார், ஒரத்தநாடு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பில் சேர்ந்து 12 ஆம் வகுப்பு வரை படித்தார். அதன்பின் திருவையாறு அரசர் கல்லூரியில் பட்டம் பெற்ற இலக்குவனார், தமிழ் மொழியில் எம்ஓஎல் பட்டமும் ஆங்கில மொழியில் பிஓஎல் பட்டமும் பெற்றார்.
இவர் குலசேகரபட்டினம் தமிழ் கல்லூரி, ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகம், சென்னை மாநிலக் கல்லூரி, மதுரை தியாகராஜர் கல்லூரி, விருதுநகர் செந்தில்குமார நாடார் கல்லூரி போன்றவைகளில் விரிவுரையாளராகவும், பேராசிரியராகவும், முதல்வராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் தான் பணியாற்றிய இடங்களில் எல்லாம் தமிழ் மன்றங்களை நிறுவினார். கடந்த 1962-ம் ஆண்டு திருநகரில் தமிழ் காப்பு கழகத்தை தொடங்கினார். இதன் தலைவராக இலக்குவனாரும், பொதுச் செயலாளராக தமிழறிஞர் இளங்குமரன் ஆகியோரும் பொறுப்பு வகித்தனர். இந்த கழகத்தின் சிறப்பான 4 கொள்கைகள் தமிழில் பேசுக, தமிழில் எழுதுக, தமிழில் பெயரிடுக மற்றும் தமிழில் பயில்க என்பதுதான்.
இந்நிலையில் இலக்குவனார் திருவாரூரில் தமிழ் ஆசிரியராக இருந்த போது தான் கலைஞர் கருணாநிதி அவரிடம் மாணவராக இருந்தார். இவரைப் போன்று நா. காமராசன், கவிஞர் இன்குலாப், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ஆகியோரும் மாணவர்களாக இருந்தனர். கடந்த 1963-ஆம் ஆண்டு இலக்குவனார் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இந்த ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட தொல்காப்பியத்தை தமிழகத்தில் முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா போப் ஆண்டவருக்கு பரிசாக வழங்கினார். இவர் தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் பல்வேறு நடைமுறைகளை செயல்படுத்தியதோடு, வகுப்பறையில் மாணவர்கள் யெஸ் சார் என்று ஆங்கிலத்தில் கூறுவதை உள்ளேன் ஐயா என்று தமிழில் மாற்றினார்.
கடந்த 1965-ஆம் ஆண்டு இந்தி மொழி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட இலக்குவனார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2009-ஆம் ஆண்டு இலக்குவனாரின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ் மொழி துறையால் சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டது. மேலும் தமிழ் மொழிக்காக தொண்டாற்றிய இலக்குவனார் தொல்காப்பிய ஆராய்ச்சி, வள்ளுவர் வகுத்த அரசியல், அம்மூவனார், என் வாழ்க்கை போர் மற்றும் எழிலரசி உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். இந்த ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு சி. இலக்குவனாரை நினைவு கூர்வதில் பெருமிதம் கொள்கிறோம்.