திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள அகாரம் கிராமத்தில் கலைச்செல்வி(46) என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் முருகன் ஆறு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் 2 பெண் பிள்ளைகளுடன் கலை செல்வி கூலி வேலை பார்த்து படிக்க வைத்துள்ளார். இந்நிலையில் கலைச்செல்வி கடந்த 1 ஆம் தேதி மாலை சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்பக்கம் வந்த இருசக்கர வாகனம் கலைச்செல்வி மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். அதன் பிறகு அவரை மீட்டு பொதுமக்கள் வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை மூளைச்சாவு அடைந்துள்ளார். இதனால் சோகத்தில் ஆழ்ந்த அவரது குடும்பத்தினர் சேவை நோக்குடன் கலைச்செல்வி இதய உட்பட உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன் வந்தனர்.
இதற்கான அறுவை சிகிச்சை அதே மருத்துவமனையில் நடைபெற்றது. அதன்படி இதயம் சென்னை காவேரி மருத்துவமனைக்கும், இடது சிறுநீரக சென்னை வேளச்சேரி பிரசாந்த் மருத்துவமனைக்கும், வலது சிறுநீரகம் வேலூர் ஸ்ரீ நாராயணி மருத்துவமனைக்கும், கல்லீரல், 2 கண்கள் சென்னை போரூர் ராமச்சந்திர மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து மூளை சாவு அடைந்தவரின் இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்முறையாக அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு உடல் உறுப்புகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பிறகு ‘சென்னையில் ஒரு நாள்’ திரைப்படம் பாணியில் வேலூர் முதல் சென்னை வரை போக்குவரத்து சீர் செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் உடல் உறுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மின்னல் வேகத்தில் பறந்து சென்ற ஆம்புலன்ஸுக்கு பொதுமக்கள் வழிநெடுகிலும் ஒத்துழைப்பு வழங்கினர்.