Categories
மாநில செய்திகள்

ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள்…. மீனவர்களுக்கு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…!!!!

ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை வளர்க்கக்கூடாது என கலெக்டர் அறிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை வளர்ப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் தடை விதித்துள்ளது. ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் வெளிநாட்டு மீன் வகையைச் சேர்ந்தவை. இந்த மீன் இந்தியாவுக்குள் அனுமதி இல்லாமல் கொண்டுவரப் பட்டுள்ளது. இந்த மீன்கள் மனிதர்களுக்கும் மற்ற நீர் வாழ் உயிரினங் களுக்கும் ஆபத்தை விளைவிக்க கூடியவை. இந்த மீன்கள் தன்னுடன் வாழும் மற்ற மீன் வகைகளை அழிக்கும் திறன் கொண்டவை என்பதால், நீர்நிலைகளுக்குள் நுழைந்து விட்டால் அவற்றை அழிப்பது மிகவும் கடினமாகும். இவ்வகை மீன்களால் குறைந்த அளவில் இருக்கும் தண்ணீரில் கூட இனப்பெருக்கம் செய்து கொள்ள முடியும்.

இந்த மீன்கள் நம் நாட்டின் பாரம்பரிய மீன்கள் மற்றும் அவற்றின் முட்டைகளை உணவாக்கிக் கொள்ளும். இதனால் நம்முடைய பாரம்பரிய மீன் வகைகள் அனைத்துமே அழிந்து விடும். இவ்வகை மீன்களை பண்ணைகளில் உள்ள குட்டைகள் மற்றும் மீன் வளர்ப்பு குளங்களில் வளர்த்தால் மழைக்காலங்களில் குளங்களில் இருந்து தப்பிச் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. இப்படி தப்பிச்செல்லும் மீன்கள் ஆறுகள் மற்றும் ஏரிகளை சேர்ந்து அங்குள்ள மொத்த மீன் வகைகளையும் அழித்துவிடும். இதனால் ஒரு கட்டத்தில் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களைத் தவிர மற்ற எந்த மீன் வகைகளும் இல்லாமல் போய்விடும். இதனால் நம் நாட்டின் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும். எனவே மீன் விவசாயிகள் யாரும் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை வளர்க்க வேண்டாம்.

ஒருவேளை யாராவது வளர்த்தாலும் கூட உடனடியாக அந்த மீன்களை அழித்து விடுங்கள். இந்த அறிவிப்பை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனையடுத்து மீன் வளர்ப்பில் ஆர்வமாக இருக்கும் பண்ணையாளர்கள் அரசால் அனுமதிக்கப்பட்ட மீன்களை மீன்வளத் துறையின் ஆலோசனை பெற்று வளர்க்கலாம். அதோடு புதிதாக மீன் பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் மாவட்ட மீன் வளர்ப்பு முகமை முதன்மை நிர்வாக அலுவலர் தொடர்பு கொண்டு மீன் பண்ணையை பதிவு செய்து அரசு மானியத்தினை பெற்றுக் கொள்ளலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு மீன்வள உதவி இயக்குனர் அலுவலகம், டோர் நம்பர் 1/165ஏ, ராமசாமி கவுண்டர் தெரு, ஒட்டப்பட்டி, தர்மபுரி 636705, தொலைபேசி எண் 04342-296623 என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம் என கூறியுள்ளார்.

Categories

Tech |