உத்தரகாண்ட் டேராடூன் என்ற பகுதியைச் சேர்ந்த மகேஷ் திவாரி(47) என்பவர் எந்த வேலையும் செய்யாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார். சகோதரர் வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணத்தை வைத்து தான் இவருடைய குடும்பம் நடந்தது என கூறப்படுகிறது. இதில் மகேஷ் திவாரி, 75 வயது தாயார், 35 வயது மனைவி மற்றும் 3 மகள்களுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் மகேஷ் திவாரி வேலை இன்றி இருந்ததால் அவரது மனைவி அவரை வேலைக்கு சென்று பணம் சம்பாதித்து வரும்படி கூறியதாக தெரிகிறது.
இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் சம்பவத்தன்று மகேஷ் தன்னுடைய மனைவியிடம் காலை டிபன் செய்ய கூறினார். அப்போது கேஸ் இல்லை என அவரது மனைவி பதில் கூறியுள்ளார். அதன்பின் மகேஷ் வேறு சிலிண்டரை மாற்ற முயன்றபோது அதுவும் காலியான சிலிண்டர் என அவர் மனைவி கூறியதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஒருக்கட்டத்தில் ஆத்திரமடைந்த மகேஷ், சமையலறையிலிருந்த கத்தியை எடுத்து தன் மனைவியின் கழுத்தை அறுத்தார்.
அதனை தொடர்ந்து மகேஷ் தனது தாய் மற்றும் 3 மகள்களையும் அடுத்தடுத்து கொலை செய்தார். இதற்கிடையில் மகேஷ் வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டதால் பக்கத்து வீட்டுக்காரர் ஜன்னல் வழியே இந்த கொடூர சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பின் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மகேஷ் நீண்ட மதநம்பிக்கை உடையவர் எனவும் மணிக்கணக்கில் பூஜை செய்து வந்ததாகவும், சற்று மனநிலை சரியில்லாதவர் எனவும் கூறப்படுகிறது.