தமிழகத்தில் அரசு பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மேற்படிப்பு பயில்வதற்கு உதவியாக மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பட்டப்படிப்பு,பட்டய படிப்பு மற்றும் தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநீற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் தோறும் மாணவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்விக்கு சென்ற மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். ஆசிரியர் தினமான இன்று 15 மாதிரி பள்ளிகள், 26 தகைசால் பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் என்ற திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவி தொகை கொடுப்பது இலவசமல்ல என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அவர்,மகள்களைப் படிக்க வைக்க காசு இல்லையே என்ற கவலை பெற்றோருக்கு இருக்கக் கூடாது, மாணவிகளுக்கு இதை வணங்குவதை அரசு கடமையாக கருதுகிறது. இதன் மூலம் தமிழகத்தின் வளர்ச்சி அதிகரிக்கும். அனைவருக்கும் வளர்ச்சி எல்லோருக்கும் எல்லாம் என்பதை இந்த அரசின் முக்கிய நோக்கம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.